வட மாகாணத்தில் போக்குவரத்தை மேம்படுத்தும் வலுவான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் Toyota Lanka

நாட்டின் முழுமையான போக்குவரத்து மற்றும் கையாளுகை தீர்வுகள் வழங்குநரான (Total Mobility and Logistics Solutions Provider) ‘Toyota Lanka’ நிறுவனம், 2026 செப்டெம்பர் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் கண்டி வீதியில், சாவகச்சேரியிலுள்ள நாவற்குழி பகுதியில் தனது புதிய மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவுடன் நாடளாவிய விரிவாக்கத்தில் ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. இந்த மேம்பாடானது, வடக்கு பிராந்தியத்தில் Toyota Lanka நிறுவனத்தின் இருப்பை வலுப்படுத்துவதுடன், யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு அதன் நம்பிக்கையான போக்குவரத்து மற்றும் விற்பனைக்குப் பிந்தைய தீர்வுகளை மிக அருகில் கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய மையம், புதிய Toyota வாகன விற்பனை, Toyota அசல் உதிரிப் பாகங்கள், தொழில்முறை ரீதியான வாகனப் பராமரிப்பு சேவை மற்றும் வாகன உடல் பழுதுபார்ப்பு மற்றும் நிறப்பூச்சு சேவைகளுடன், வணிக மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கான பல்வேறு போக்குவரத்து கையாளுகை தீர்வுகளையும் வழங்குகின்றது. இச்சேவைகளை யாழ்ப்பாணத்தில் ஒன்றிணைப்பதன் மூலம், வடக்கு பிராந்தியம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதியையும் நம்பகமான ஆதரவையும் Toyota Lanka வழங்குகின்றது.

இந்த விரிவாக்கமானது, Toyota நிறுவனத்தின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக Toyota Lanka இலங்கையில் வழங்கி வரும் 30 ஆண்டுகால விசேடத்துவத்தை பிரதிபலிப்பதுடன், வர்த்தகநாமத்துடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையையும் குறிக்கிறது. நாடு முழுவதும் நீண்ட காலமாக, Toyota Lanka பரந்த அளவிலான போக்குவரத்து சேவை, விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் போக்குவரத்து கையாளுகை தீர்வுகளை வழங்குவதற்காக வாகன விற்பனைக்கும் அப்பால் தனது இருப்பையும் விரிவுபடுத்தி வந்துள்ளது.

இந்த அடிக்கல் நடும் விழாவில் Toyota Lanka நிறுவனத்தின் தலைவர் மசாகி கவாபாட்டா (Masaaki Kawabata) மற்றும் Toyota Lanka நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோஹர அத்துகோரள ஆகியோருடன் அரச அதிகாரிகள், முப்படை பிரதிநிதிகள், யாழ்ப்பாண பிராந்திய உதிரிப் பாகங்கள் விற்பனையாளர்கள், வங்கி மற்றும் குத்தகை பங்காளர்கள், வாடிக்கையாளர்கள், வணிக பங்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். சமயத் தலைவர்களும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டதுடன், யாழ்ப்பாணத்தின் தனித்துவமான அடையாளத்தைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இவ்விழாவில் உரையாற்றிய மசாகி கவாபாட்டா, Toyota Lanka நிறுவனத்தின் ‘நகரத்தில் சிறந்தது’ (Best in Town) எனும் எண்ணக்கருவை சுட்டிக்காட்டியதுடன், மேம்பட்ட Toyota Lanka தொழில்நுட்பம், நம்பிக்கையான தரநிலைகள் மற்றும் உயர்தர வாடிக்கையாளர் அனுபவத்தை யாழ்ப்பாண மக்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்ப்பதற்கான நிறுவனத்தின் ஆர்வத்தை வலியுறுத்தினார். Toyota Lanka நிறுவனத்தின் பிராந்திய விரிவாக்கமானது வெறுமனே விற்பனை மையங்களை நிறுவுவதில் மட்டுமல்லாமல், அது சமூகங்களுக்குள் ஒரு நம்பிக்கையான மற்றும் நம்பகமான பங்காளியாக மாறுவதிலும் கவனம் செலுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மனோஹர அத்துகோரள, யாழ்ப்பாணத்தில் ஒரு வலுவான இருப்பை நிறுவ வேண்டும் எனும், 20 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட Toyota Lanka நிறுவனத்தின் நீண்ட கால இலட்சியத்தைப் எடுத்துக் கூறினார். ஒரு நகரில் நிறுவனத்தின் இருப்பு என்பது போக்குவரத்து, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் சமூகத்தின் பரந்த வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் எனும் நிறுவனத்தின் எதிர்பார்ப்பை அவர் இங்கு சுட்டிக் காட்டினார். சர்வதேச Toyota தரநிலைகளுக்கு ஏற்ப இளம் வாகனத் துறை வல்லுநர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள அனுமதிக்கும் வகையில், ‘Toyota Lanka Auto Academy’ மூலம் அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான Toyota Lanka நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் அவர் இங்கு வலியுறுத்தினார். இந்த கல்வியகம் ஒன்பது ஆசிய நாடுகளை சேர்ந்த பயிலுனர்களுக்கு அதன் தொழில்நுட்பப் பயிற்சி நிபுணத்துவத்தை பெறுவதற்கான பரந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம், இலங்கையின் வாகனம் சார்ந்த திறமைகளை அது உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றது.

சாவகச்சேரி பிரதேச சபைக்கான தனது பங்களிப்பாக, 50 புதிய வீதிப் பெயர்ப் பலகைகளை Toyota Lanka வழங்கியுள்ளது. இந்த முயற்சியானது, தான் சேவை செய்யும் சமூகங்களின் அன்றாட வசதிகளுக்கான தேவைகள் மற்றும் மேம்பாடுகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் போக்குவரத்திற்கு அப்பால், பங்களிப்பதற்கான Toyota Lanka நிறுவனத்தின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

Toyota Lanka நிறுவனத்தின் தொடர்ச்சியான விரிவாக்கமானது, நம்பகத்தன்மை, நீண்டகால வாடிக்கையாளர் உறவுகள் மற்றும் நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதுடன், Toyota LIFE – Loyalty, Integrity, Fairness, Ethics (விசுவாசம், ஒருமைப்பாடு, நேர்மை, நெறிமுறைகள்) ஆகியவற்றை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டல் கோட்பாடுகள், நம்பிக்கையான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து கையாளுகை தீர்வுகளை மேலும் அதிகமான சமூகங்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கப்படுவதன் மூலம் நிறுவனத்தின் அணுகுமுறையை தொடர்ச்சியாக கட்டமைக்கின்றன.

வடக்கிலிருந்து தெற்கு வரையிலும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு மிக அருகில் மிக உயர்ந்த தரத்திலான சேவை மற்றும் ஆதரவை வழங்குதல் எனும், தனது நாடளாவிய இருப்பை ஒரேயொரு தெளிவான நோக்கத்துடன் Toyota Lanka தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. யாழ்ப்பாணத்தின் புதிய மையமானது அந்தப் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான அடியையும், வடக்கு சமூகத்துடனான வலுவான உறவின் தொடக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

Post Comment