போலி உதிரி பாகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுக்க, கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) ஆதரவுடன் Honda நிறுவனம் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. குருணாகல், இரத்தினபுரி, ஹோமாகம, பஞ்சிகாவத்தை ஆகிய பகுதிகளில் அண்மையில் இவ்வாறான பல சோதனைகள் நடத்தப்பட்டு, Honda வர்த்தக நாமத்தின் போலி உதிரிப் பாகங்களை விநியோகித்த பல வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாடிக்கையாளரின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்ற வகையில், இந்த முகவர்கள் போலியான உதிரிப்பாகங்களை பொதியிட்டு விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து, அதன் விநியோகச் சங்கிலிகளை இல்லாதொழிக்கும் நோக்கில் தற்போது பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த போலி உதிரிப் பாகங்களின் மூலாதாரங்களை கண்டறிவதன் மூலம், போலி உதிரிபாகங்களுடன் தொடர்புடைய சாத்தியமான அபாயங்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க முடியுமென அதிகாரிகள் நம்புகிறார்கள்.
CCD இன் உதவியுடன் தொடர்ச்சியாக இது போன்ற சோதனைகள் முன்னெடுக்கப்படும் என, Honda நிறுவன அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த சோதனைகள் முதன்மையாக போலி உதிரிப் பாகங்கள் விற்பனை தொடர்பில் வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. இது ஒரு பெரும் கவலைக்குரிய விடயம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. போலியான உதிரிப் பாகங்களைப் பயன்படுத்துவது வாகனத்தின் தனித்துவத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், சாரதிகளுக்கும் பயணிகளுக்கும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்களை ஏற்படுத்துகிறது.
வாடிக்கையாளர் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதோடு, அனைத்து வாடிக்கையாளர்களும் உண்மையான உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வதில் முனைப்புடன் இருக்குமாறு, Honda நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து உண்மையான உதிரிப் பாகங்களை மட்டும் கொள்வனவு செய்வது அவசியமாகும், ஏனெனில் அவை உச்சபட்ச பாதுகாப்பு மற்றும் செயற்றிறனுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. உரிய செயற்பாடு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், உயர் தரங்களுக்கு இணங்க, Honda நிறுவனத்தின் உண்மையான உதிரிப் பாகங்கள் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
Photo Caption: Honda போலி உதிரிப் பாகங்கள்