யூனிலீவர் ஸ்ரீ லங்கா மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) ஆகியன, இலங்கையில் சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்களை (SMEs) மேம்படுத்துவதற்கான மூன்று வருட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இது யூனிலீவர் மற்றும் IDB ஆகியவற்றுக்கு இடையேயான அரச – தனியார் பங்காளித்துவம் என்பதோடு, இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நுண், சிறிய, நடுத்தர அளவிலான 20 தொழில்முனைவோரின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக, கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDF) மூலம் கூட்டாக ஆதரவளிக்கப்படும் திட்டமாகும். கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் (IDF) மேற்பார்வையின் கீழ், இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களுக்கு இணங்க, குறைந்த வட்டியில், திருப்பிச் செலுத்தக்கூடிய கடன்கள் வடிவில், நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு (MSMEs) நிதி மூலதனத்தை இது வழங்குகிறது. இது அவர்களின் தொடக்கத்திற்கு அல்லது ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக கைத்தொழில் அமைச்சினால் முன்னுரிமை அளிக்கப்பட்ட துறைகளில் உள்ளூர் உற்பத்தியை விரிவுபடுத்த மிகப் பெரும் உதவியாக அமைகிறது. சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்ததாக, முதல் தொகுதி கடன்கள் 10 பெண் சிறு தொழில்முனைவோருக்கு, கடந்த 2024 மார்ச் 12 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த திட்டத்தின் கீழ், யூனிலீவர் தனது சொந்த மற்றும் தற்போது இடம்பெற்று வரும் SME மேம்பாட்டுத் திட்டமான “சௌபாக்யா” மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை IDF இற்கு பங்களிப்புச் செய்யும். சௌபாக்யா திட்டமானது, கடந்த 20 வருடங்களில் 15,000 இற்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட யூனிலீவர் தயாரிப்புகளின் ஆரம்பத் தொகுதியை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட வலுவூட்டல் திட்டமாகும்.

யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அலி தாரிக் இது பற்றி தெரிவிக்கையில், “சிறிய தொழில்கள், குறிப்பாக பெண்களால் நிர்வகிக்கப்படும் சிறு வணிகங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது, இலங்கையின் வளர்ச்சி மற்றும் வெற்றியில் அனைவரினதும் பங்களிப்பையும் பெற ஊக்குவிக்கிறது. எதிர்வரும் 3 வருடங்களில் 60 இற்கும் மேற்பட்ட சிறு வணிகங்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை வலுவூட்டும் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்க எமக்கு அழைப்பு விடுத்த கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும இங்கு கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் பொருளாதாரத்தின் அடிப்படை தளமாக SME துறை விளங்குகிறது. ஊக்குவிப்பு, மேம்படுத்தல், அபிவிருத்தி ஆகியவற்றின் அடிப்படையில் SME களுக்கு விரிவான ஆதரவை வழங்க IDB உறுதியாக உள்ளது. முக்கியமாக, சமூகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் பெண் தொழில்முயற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்ரீ லங்கா பெண் தொழில்முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்காக யூனிலீவர் கொண்டுள்ள பங்களிப்பிற்காக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்றார்.

கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண, இங்கு தனது கருத்தை பகிர்ந்து கொள்கையில், “இலங்கையின் வரலாற்றில், நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய செயற்பாடுகள் கூட எமது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வை தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான தருணத்தை நாம் ஏற்படுத்திச் செல்கிறோம். பொருளாதார மீட்சியை நோக்கி நாம் பயணிக்கும்போது, ​​நியாயமான மற்றும் சமநிலையான முடிவை உறுதி செய்ய, பொருளாதாரத்தில் தங்கியுள்ள MSME கள் உள்ளிட்ட எவரையும் விட்டுச் செல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும். அந்த வகையில், அரசாங்கம் என்ற ரீதியில், யூனிலீவர் நிறுவனம் உள்ளூர் தொழில்துறைக்கு உதவ முன்வந்துள்ளமைக்கு நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

இந்த கூட்டாண்மையானது, இலங்கையில் MSME களுக்கு ஆதரவளிப்பதில் யூனிலீவர் ஏற்கனவே கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் வலுவாக்குகிறது. ஒவ்வொரு நாளும் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தினசரி அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக உற்பத்தி, விநியோகம் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளின் சூழல் தொகுதியை கொண்டுள்ள, நாட்டின் மிகப்பெரிய பெறுமதிச் சங்கிலிகளில் ஒன்றைத் தொகுத்து வழங்குகின்ற யூனிலீவர் நிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, ஆதரவளிக்கிறது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டமானது, யூனிலீவர் மற்றும் IDB யின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை உள்ளீர்க்கப்பட்ட மற்றும் சமத்துவமான அபிவிருத்தி மற்றும் அளவிடக்கூடிய தாக்கத்திற்கான அரச – தனியார் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *