இலங்கை 2042 ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது என, ஐந்து மாதங்களுக்கு முன்பாக, கடந்த ஒக்டோபர் 2023 இல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நாட்டின் தேசிய ஆர்வமானது, மின்சக்தியில் தன்னிறைவு மற்றும் உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பிற்கான இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளின் ஒரு பகுதியாகும்.

இலங்கையின் தற்போதைய மின்சக்தி உற்பத்தியானது, அதன் அரைவாசிக்கும் மேற்பட்டவை (54%) பெற்றோலிய எரிபொருட்களாலும் நிலக்கரியினாலும் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றது. பெற்றோலியம் மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கு செலவிடப்படும் பெறுமதி வாய்ந்த அந்நியச் செலாவணியானது, பொருளாதார மீட்சியடைய மிகவும் போராடி வரும் இலங்கைக்கு ஒரு பாரிய சுமையாகும் என்பதோடு, ஏற்றுமதி வருமானத்தின் பாரிய அளவை அது எடுத்துக் கொள்வதை காட்டுகிறது. 34% மின்சக்தித் தேவைகள் கனிய எரிபொருட்களாலும், 8% பிரதான நீர் மின்சார மூலங்களிலிருந்தும், வெறுமனே 4% ஆனது புதுப்பிக்கத்தக்க வலுசக்தியிலிருந்தும் பூர்த்தி செய்யப்படுகிறது என்பதையும் தேசிய மின்சக்தி உற்பத்தித் தரவுகள் குறிப்பிடுகின்றன. இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இந்த மோசமான சூழ்நிலையை உணர்ந்து, மின்சக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக, புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை நாட்டில் அமைக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளது. ஒட்டுமொத்த மின்னுற்பத்தி கலவையில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியின் பாரிய பங்கை நோக்கி செல்ல வேண்டுமெனவும் அது வலியுறுத்துகிறது.

PUCSL இன் பரிந்துரை மற்றும் 2050 ஆம் ஆண்டளவில் முழுமையாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி  மூலமான மின்சார விநியோகத்தை அடைவதற்காக இலங்கையினால் பிரகடனப்படுத்தப்பட்ட நீண்ட கால இலக்கு ஆகியவற்றுடன் உற்று நோக்கும்போது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (RE) மூலம் நாட்டின் தேவையில் 4% மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது எனும் நிலையே உள்ளது. இது, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்திப் பிரிவின் பயன்படுத்தப்படாத பாரிய ஆற்றலைச் சுட்டிக்காட்டுகிறது.

நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் நிலையில், இந்த இலட்சிய வலுசக்தி இலக்குகள் மேலும் சவாலானதாக மாறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் உட்பட, அரச துறை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பொறுப்புகளை இலங்கை கொண்டிருப்பதால், இந்த இலக்குகளை தனியாக அடைவது என்பது, அரச துறைக்கு உள்ள ஒரு பாரிய (தடை இல்லையென்றாலும்) முயற்சியாகும். எனவே, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியில் உலகளாவிய முதலீட்டு கூட்டாண்மையானது, இது தொடர்பாக அடுத்த படியை நோக்கிச் செல்ல இன்றியமையாததாக உள்ளது.

எனவே, உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் தொழில்நுட்ப திறன் கொண்ட வலுசக்தி கூட்டு நிறுவனங்களில் ஒன்றும், உலகின் மிகப் பெரிய கலப்பு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பூங்காவை (சூரிய சக்தி + காற்று வலு) இந்தியாவில் அமைக்கும் அதானி குழுமம் போன்ற ஒரு சர்வதேச வலுசக்தி பங்குதாரரால், இலங்கையின் மின்சக்தித் துறைக்கு வரவேற்கத்தக்க ஒரு நிவாரணத்தை ஏற்படுத்த முடியுமாக இருக்கும். இந்தியா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற சந்தைகளில் நேரம் மற்றும் சிறந்த நிதிப் பயன்பாடு தொடர்பான பாரிய அளவிலான திட்டங்களை வழங்குவதில் அதானி கொண்டுள்ள விரிவான அனுபவமானது, இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த கூட்டிணைவாக அமைகிறது. இக்குழுமம் நிதி ரீதியாக வலுவாக உள்ளதோடு, எதிர்வரும் தசாப்தத்தில் பசுமை வலுசக்திக்கு மாறுவதற்காக, 100 பில்லியனுக்கும் அதிக டொலர்களை முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இலங்கை தனது பங்கை சிறப்பாக முன்னெடுத்தால், இந்தத் தொகையில் ஒரு சிறந்த பகுதியை இங்கு முதலீடு செய்து, நமது பிள்ளைகளின் நிலைபேறான எதிர்காலத்தை சிறப்பாக அமைக்கலாம்.

இலங்கையில், Adani Green Energy (Sri Lanka) Ltd நிறுவனத்தின் 386 மில்லியன் டொலர் முதலீட்டுடன் கூடிய, 250 மெகாவாற் மன்னார் காற்றாலை மின் திட்டம் மற்றும் 355 மில்லியன் டொலர் முதலீட்டுடனான 234 மெகாவாற் பூநகரி காற்றாலை மின் திட்டம் ஆகியன நாட்டின் புதுப்பிக்க்கத்தக்க வலுசக்தித் துறையில் குழுமத்தினால் நன்கு ஆய்வு செய்யப்பட்ட திட்டங்களாகும். மன்னார் காற்றாலை மின் திட்டம், இலங்கையின் பசுமைப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் மற்றும் வெளவால்கள் தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட விரிவான சுயாதீனமான சூழல் தாக்க மதிப்பீடானது (EIA), இலங்கை அரசின் இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகாரசபையினால் (SLSEA) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின், விலங்கியல் மற்றும் சூழல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் தேவக வீரகோன் தலைமையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள இல்லினோய்ஸ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் முனைவர் (PhD) பட்டம் பெற்ற பேராசிரியர் வீரகோன், இதற்கு முன்னர் இது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளதோடு, அத்தகைய ஆய்வுகளில் நிபுணர் பரிந்துரைக்கான நம்பகமான ஆதாரமாக அவர் விளங்குகின்றார்.

இலங்கை பறவையியல் குழுவான Ceylon Bird Club (CBC) அமைப்பின் தரவுத் தொகுப்புகள் உள்ளிட்ட, மத்திய சூழல் முகவரின் பரிந்துரை விதிமுறைகளுக்கமைய, திட்டப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் பௌதீகத் தரவு சேகரிப்புடன் முழுமையான பருவங்களில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பறவைகள் இடம்பெயரும் பாதைகள் மற்றும் கூடு கட்டும் இடங்களை அடையாளம் காண பறவைகள் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டதோடு, குறிப்பாக இடம்பெயரும் பறவைகளின் பாதைகள் அல்லது உணர்திறன் மிக்க வாழ்விடங்களில் காற்றாலை தொகுதிகள் நிறுவப்படுவதானது, பறக்கும் அல்லது ஓய்வெடுக்கும் பறவைகளுக்கு இடையூறு இல்லாமல் முன்னெடுக்கப்படுகிறது.

காற்றாலை தொகுதிகள் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரேடார் தொகுதிகள் மூலம் செயற்படுத்தப்படுகின்றன. அவை உள்வரும் பொருள் ஒன்றைக் கண்டறிந்து, தானாகவே தமது செயற்பாட்டை நிறுத்திக் கொள்கின்றன. பறவைகள் காற்றாலை விசிறிகளுக்குள் செல்வதைத் தடுக்க ஒலி அல்லது காட்சி மூலமா தடுப்புகளை நிறுவுதல், குறைந்த விசிறி சுழற்சி வேகம் கொண்ட உயரம் கூடிய விசிறிகளைப் பயன்படுத்துதல் (தாழ்வாக பறக்கும் பறவைகளுடன் மோதும் அபாயத்தைக் குறைக்க), பறவைகளுக்கு அதிகம் தெரியும் வகையில் விசிறிகளின் வடிவமைப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் அடையாளங்கள் அல்லது குறிப்பிட்ட வடிவங்களை இணைப்பதன் மூலம் அவற்றுக்கு தென்படும் தன்மையை அதிகரித்தல் என்பன, தொழில்நுட்ப வடிவமைப்புகளில் முக்கிய அம்சங்களாகும். பறவைகளின் வாழ்விடங்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்பையும் ஈடு செய்யும் வகையில், முக்கியமான இடங்களில் கவனம் செலுத்தியவாறு, வாழ்விட மறுசீரமைப்புத் திட்டங்கள் மற்றும் இடம்பெயர்ந்த அல்லது பாதிக்கப்பட்ட பறவை இனங்களை ஈடுசெய்கின்ற, வாழ்விடங்களை உருவாக்கும் திட்டங்கள் மூலம் மீளமைக்கப்படும். இதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், முன்னேற்றப்பட வேண்டிய பகுதிகளை அடையாளம் காணவும், எதிர்கால நடவடிக்கைக்கான உத்திகளை வகுக்கும் வகையில் காற்றாலை விசிறிகளுடனான பறவைகளின் தொடர்புகள் மற்றும் பறவைகளின் நடத்தைகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையிலான நீண்ட கால கண்காணிப்பு திட்டங்களை Adani Green Energy (Sri Lanka) முன்னெடுக்கும். காற்றாலை தொகுதிகளை பறவைகளின் வாழ்விடங்களுக்கு அருகில் அமைத்தல், வடிவமைத்தல், இயக்குதல் தொடர்பான விதிமுறைகள் இங்கு கண்டிப்பாக அமுல்படுத்தப்படும். உள்ளூர் சமூகங்கள், பங்குதாரர்கள், நிர்மாணவியலாளர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரசாரங்கள், பிராந்தியத்தின் வரலாற்று பல்லுயிர்த் தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்துதல், பறவை மோதல்கள் மற்றும் வாழ்விடக் குழப்பங்களைத் தணிப்பதற்கான சிறந்த நடைமுறைகள் தொடர்பான பயிற்சி அமர்வுகள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான கலந்துரையாடல்கள் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான மன்றங்கள் மற்றும் புத்தாக்கமான தீர்வுகளை அடையாளம் காணுதல் ஆகியன, அதானி குழுமத்தால் முன்னெடுக்கப்படும்.

திட்ட அமுலாக்கம் மற்றும் O&M (செயற்பாடு மற்றும் பராமரிப்பு) கட்டங்களில், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இந்தத் திட்டம் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பெரிதும் உதவியாக அமையும்.

இலங்கையானது, வரலாற்று நெருக்கடியில் இருந்து மீண்டு, நிலைபேறான மீட்சி மற்றும் நீண்ட கால வளர்ச்சியின் பாதையில் பயணிக்கும் நிலையில், நாட்டிற்கு வரும் ஒத்துழைப்பு மிக்க சர்வதேச முதலீட்டு பங்காளிகள் கோரும் விடயங்களை செய்து கொடுப்பது கட்டாயமாகும். அதானி குழுமத்தின் மிக ஆழமான நிபுணத்துவத்தின் ஆதரவுடன் Adani Green Energy (Sri Lanka) Ltd ஆனது, இந்த தனித்துவமானதும், தேவைகளைக் கொண்ட சவால்களுக்கு பதிலளிக்கவும், தேசிய மின் கட்டமைப்பிற்கு தொடர்ச்சியாக பசுமை மின்சக்தி விநியோகத்தை உறுதிப்படுத்தவும் தயாராக உள்ளது. மன்னார் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டமானது, சிறந்த சூழல் பாதுகாப்பு திட்டத்தை உள்ளடக்கியுள்ளதன் காரணமாக, அது இலங்கையில் ஒரு முக்கிய பசுமை வலுசக்தி திட்டமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

#CONCLUDED#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *