இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, அதன் வருடாந்த புத்தக விநியோகத் திட்டத்தை, திக்கோவிட்டவில் அண்மையில் திறக்கப்பட்ட கடல்சார் பொறியியல் பட்டறையின் ஊடாக மீன்பிடித் துறையில் உள்ள சமூகங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

நிறுவனத்தின் வருடாந்த புத்தக விநியோக திட்டமானது, DIMO நிறுவனத்தின் நிலைபேறானதன்மை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக உள்ளதோடு, வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் மூலம் மீளெழுச்சி பெறுகின்ற சமூகங்களை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி, இந்த முன்முயற்சியானது நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 4 ஆன, தரமான கல்வி உடன், உள்ளீர்க்கப்பட்ட மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்தல், அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துதல் எனும் பரந்த கண்ணோட்டத்துடன் ஒத்துப்போகிறது. அதற்கமைய நிறுவனம் அதன் வருடாந்த புத்தக விநியோக திட்டத்தை சியம்பலாபே, வெலிவேரிய, தொட்டலங்க போன்ற DIMO சேவை நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் மேற்கொண்டுள்ளது.

மீன்பிடித் துறையும் அதனுடன் தொடர்புபட்ட சமூகங்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இவ்வருடத்தில், வெவ்வேறுபட்ட சமூகங்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், மீன்பிடித் துறையில் உள்ள சமூகங்களுக்கு தனது புத்தக விநியோகத் திட்டத்தை நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, இத்திட்டம் தொடர்பான தனது கருத்தைத் தெரிவிக்கையில், “இது மீன்பிடித் துறையில் உள்ள சமூகங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் DIMO நிறுவனத்தின் முதலாவது பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) முயற்சியாகும். வறுமையை ஒழிப்பதற்கும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் கல்வி ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம். தேசத்தின் ஒரு வளர்ச்சிப் பங்காளி எனும் வகையில், அனைத்து சமூகத்தினரினதும் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை தொடர்ச்சியாக ஊக்குவிப்பது DIMO நிறுவனத்தின் இன்றியமையாத அம்சமாக உள்ளது.” என்றார்.

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுக வடக்கு முனையத்தின் உள்ளூர் துறைமுக முகாமையாளர் சுமுது தஹநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில், “DIMO அதன் சிறந்த பொறியியல் தீர்வுகள் மூலம் உள்ளூர் மீன்பிடித் துறையை மேம்படுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. ” என்றார்.

திக்கோவிட்டவில் உள்ள DIMO Marine Workshop சேவை மையத்தில் இடம்பெற்ற இந்த புத்தக விநியோக நிகழ்வில், DIMO குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே, DIMO பணிப்பாளர் மற்றும் CFO சுரேஷ் குணரத்ன, DIMO விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் COO மகேஷ் கருணாரத்ன, DIMO நிறுவனத்தின் CMO தினுக் பீரிஸ், திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுக வடக்கு முனையத்தின் உள்ளூர் துறைமுக முகாமையாளர் சுமுது தஹநாயக்க, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுக தெற்கு முனையத்தின் சர்வதேச துறைமுக முகாமையாளர் பசிந்து சந்தருவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *