தற்போது இடம்பெற்று வரும் பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கு மத்தியில் ஒரு ஆரம்ப நிலை கலந்துரையாடலொன்றை முன்னெடுத்த இலங்கை அரசாங்கம் மற்றும் UNDP

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆனது, நிதியமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மொரட்டுவை பல்கலைக்கழகம், இலங்கையின் தேசிய புத்தாக்க முகவர் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, நாட்டில் காணப்படும் வரிவிதிப்பு மற்றும் நிதிக் கொள்கைகள் தொடர்பில் காணப்படும் சமகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, தேசிய வரி தொடர்பான கலந்ரையாடலுக்கான முதலாவது கூட்டத்தை நடாத்தியிருந்தது. இந்த ஆரம்ப நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இலங்கைக்கான UNDP இன் வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணங்களை வெளிக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் இந்த தேசிய கலந்துரையாடல் அமைந்திருந்தது. வரியின் நோக்கம், சமூக அல்லது நிதி தொடர்பான ஒப்பந்தம், வரி விதிப்பில் நேர்மைத் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வருமானம் தொடர்பில் நிறுவனங்களின் பொறுப்புக்கூறல், அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியன தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் UNDP இணைந்து முதன் முறை முன்னெடுத்த இலங்கையில் ‘வரி செலுத்துவோரின் எண்ணம் தொடர்பான ஆய்வு’ இல் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் இந்த கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது. வரிச்சுமை, வரித் தவிர்ப்பு, நிறுவனங்களின் மீதான நம்பிக்கை, நிறுவன சீரமைப்பின் பின்னணி, குறிப்பாகப் பொருத்தமான வருமான நிறுவனங்களுடனான அனுபவங்கள் ஆகிய விடயங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த, தேசிய ரீதியான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட பொதுவான கருத்துகளை இந்த ஆய்வு வெளிக் கொண்டு வந்தது.

கொள்கை வகுப்பாளர்கள், சட்ட வகுப்பாளர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில்முறை நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் சமூகம் அத்துடன் பல்வேறு அக்கறை மற்றும் எண்ணப்பாடுகளைக் கொண்ட 100 இற்கும் மேற்பட்ட பங்குதாரர்களை ஒன்றிணைத்து, பல்வேறு மட்டத்திலான விழிப்புணர்வு நிலைகளிலான கருத்துப் பரிமாற்றம் மற்றும் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாக இந்த உரையாடல் அமைந்தது. நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDGs) மற்றும் தேசிய வளர்ச்சிக்கான வரிவிதிப்பின் முக்கியத்துவம், வரி வருமானத்தைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பகிர்ந்து கொள்ள, இந்த கலந்துரையாடல்கள் வழிவகுத்தன. இந்த கலந்துரையாடல் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் நுண்ணறிவு ஆகியன, தேசிய கொள்கை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஒரு அத்திவாரமாக செயற்படும் என்பதோடு, சிறந்த முடிவுகளை எடுக்கும் செயன்முறைகளுக்கு மதிப்பு வாய்ந்த உள்ளீடுகளையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரிவிதிப்புத் துறையில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற உலகளாவிய வல்லுனர்களின் பங்குபற்றுதலுடனான கூட்டங்களும் இந்நிகழ்வில் இடம்பெற்றன. Tax Justice Network பிரதம அதிகாரி Alex Cobham; Public Digital UK மூலோபாய மற்றும் ஆராய்ச்சி பணிப்பாளர் Lauren Kahn, SDG இற்கான UNDP Tax ஆசிய பசிபிக் பிராந்திய திட்ட நிபுணர் சுதர்சன் கஸ்தூரிரங்கன் ஆகியோரின் பங்களிப்புடனான உரையாடல்கள் இந்த கலந்துரையாடல்களை வலுப்படுத்தின. உலகளாவிய ரீதியில் வரிக் கொள்கைகளின் சிக்கல்களை வழிநடத்துவதற்கான விலைமதிப்பற்ற எண்ணப்பாடுகளையும் அது வழங்கியது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இங்கு தெரிவிக்கையில், “வரி முறையானது, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDG) படிப்படியாக அடைவதற்கான வளங்களை அரசாங்கத்திற்கு வழங்குகிறது. இந்த வருமானங்கள் சமூகத்தின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்பட வேண்டிய அரச வளங்களை குறிக்கின்றன. இந்த உறவானது, வரிவிதிப்பு தொடர்பான தேசிய உரையாடலுக்கு அவசியமாகும் என்பதோடு, இலங்கையின் ஜனநாயக செயன்முறைக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பையும் வழங்குகிறது.” என்றார்.

வருமான நிர்வாகத்தின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு, வரி விதிப்பில் புத்தாக்கங்களின் முக்கிய பங்கு குறித்து கருத்து தெரிவித்த உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி டபிள்யூ.ஏ.எஸ். சந்திரசேகர தெரிவிக்கையில், “எமது வருமான கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதற்கு புத்தாக்கமான வரித் தீர்வுகளைத் தழுவுவது இன்றியமையாததாகும். தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலமும், தொடர்ச்சியான முன்னேற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமும், நாம் எமது செயற்றிறனை மேம்படுத்த முடியும் என்பதோடு, செலவுகளையும் குறைக்கலாம். இறுதியில் மிகவும் நெகிழ்ச்சியானதும் சிறந்த பெறுபேற்றை வழங்கக்கூடிய வரி நிர்வாகத்தை உருவாக்க முடியும்.” என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கையின் UNDP வதிவிடப் பிரதிநிதி, Azusa Kubota, “இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDG) அடைவதற்கான வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு ஒரு வரலாற்று ரீதியான வாய்ப்பை வழங்குகிறது. திட்டமிடல், வரவு செலவுத் திட்டம், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை, குடிமக்களின் ஈடுபாடு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை இது உள்ளடக்கியுள்ளது. எனவே, தேசிய வரி தொடர்பான கலந்துரையாடலானது, சமூகம் முழுவதும் புரிந்துணர்வையும், பயனுள்ள SDG இனை அடைவதற்கான வரி உறுதியை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பையும் மேம்படுத்துவதற்கான சரியான நேரத்தில் அமைந்த நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த கலந்துரையாடலானது, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. குறிப்பாக 2023 பெப்ரவரியில் ஐநா பொதுச்செயலாளர் ‘SDG Push’ (நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி செலுத்துதல்) இற்கு அழைப்பு விடுத்தார். இது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு கட்டுப்படியான வகையில், நீண்ட கால நிதியாக வருடாந்தம் 500 பில்லியன் டொலர் முதலீட்டை நோக்கியதாகும்” என்றார்.

பரஸ்பர ஒத்துழைப்பையும் வரிக் கட்டமைப்பில் ஈடுபாட்டையும் ஊக்குவிப்பதானது, நிலைபேறான பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்கும், சமூக முன்னேற்றத்தில் பங்காளிகளாகப் பங்குபற்றுவதற்கு குடிமக்களை ஊக்குவிப்பதன் மூலமும் மேலும் உள்ளீர்க்கப்பட்டதும் வளமான எதிர்காலத்தை மேம்படுத்துவதற்குமான இலங்கையின் அர்ப்பணிப்பை இது கோடிட்டுக் காட்டுகிறது.

**Ends**

UNDP பற்றி:
UNDP ஆனது, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களுடன் இணைந்து நெருக்கடிகளைத் தாங்கக்கூடிய நாடுகளை உருவாக்க உதவுவதோடு, அனைவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலான வளர்ச்சியை ஊக்குவித்து தக்கவைக்க உதவுகிறது. 170 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நெகிழ்வுத் தன்மை கொண்ட நாடுகளை உருவாக்குவதற்குமான உலகளாவிய கண்ணோட்டத்தையும் உள்ளூர் சார்ந்த நுண்ணறிவையும் நாம் வழங்குகிறோம்.  www.lk.undp.org

ஊடக விசாரணைகளுக்கு: [email protected] | 0779804188 | Ext. 1501  பின் தொடருங்கள்: UNDP on Twitter | Facebook | Instagram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *