பேண்தகு சக்தி மற்றும் சமூக நலனை ஊக்குவிக்கும் அமைப்பான Sri Lanka Blue Green Alliance, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான முதலீடுகள் குறித்த அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இலங்கை தேசிய நூலக கேட்போர் கூடத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தது.
சராசரியாக, இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 50% வரை மசகு எண்ணெய், நிலக்கரி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கே செலவிடப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிடுகிறது. Moody’s மற்றும் S&P மூலம் இலங்கைக்கு முறையே வழங்கப்பட்ட “CA” மற்றும் “SD” என குறிக்கப்படும் கடன் மதிப்பீடுகள், நாட்டுக்கு கடன் வழங்குதல் அல்லது முதலீடு செய்வது தொடர்பான கணிசமான அளவிலான அபாயத்தைக் குறிக்கின்றன. இதன் விளைவாக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், முதலீட்டிற்கான வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் காலக்கெடுவுடன் கூடிய திட்டங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளதுடன், புதுப்பிக்கத்தக்க சக்தி துறையில் முழுமையான தயார்படுத்தல் தேவைப்படுகின்றது. இவ்வாறான சவாலான சூழ்நிலை இருந்தபோதிலும், இத்தகைய முக்கிய திட்டங்களைக் கையாள்வதில் உலகளாவிய அளவில் கிடைக்கும் விரிவான நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக, அதிக காற்றாலை ஆற்றல் திறன் கொண்ட பகுதியாக அறியப்படும் நாட்டின் வட மேற்குப் பகுதியில், ஏராளமான புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், மின் பிறப்பாக்கத்துக்கான சாத்தியம் அதிகமாகவுள்ளது.
Sri Lanka Blue Green Alliance இன் பொதுச் செயலாளர் ராஜித்த அபேகுணசேகர இது தொடர்பில் குறிப்பிடுகையில், எண்ணெய் மற்றும் நிலக்கரி, நாட்டின் மின்சார உற்பத்தி உள்ளீட்டு கலவையில் 60% க்கும் அதிகமாக காணப்படுகின்றது. நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான வாய்ப்புகள் உள்ள போதிலும், இது தேசிய சக்தி பாதுகாப்பை பெரிதும் பாதிப்பதுடன், எதிர்மறையான பொருளாதார தாக்கத்துடன் நாட்டின் வர்த்தக வரவு செலவுத் திட்டத்தில் பெரும் அழுத்தத்தை பிரயோகிக்கின்றது. புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் 4% மின்சாரத் தேவைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகின்றன என்பது, நீண்ட கால பிறப்பாக்க விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டுக்குள் 50% புதுப்பிக்கத்தக்க மின்சார விநியோகத்தை அடைவதாக அறிவிக்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடப்படுவதுடன், இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிறப்பாக்கத்தில் முக்கிய முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறது” என்று அவர் வலியுறுத்தினார்.
“2050 ஆம் ஆண்டளவில் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இலங்கை தங்கியிருக்க வேண்டும் என்று இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானித்த பின்னர் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. இலங்கையின் 2016 “Blue Green Era” திட்டம், காலநிலை மாற்றம் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையின் அடிப்படையில் காலநிலை ஸ்மார்ட் மூலோபாயங்கள் மற்றும் குறைந்த கார்பன் பாவனையை மேற்கொள்வதற்கான எமது உறுதிப்பாட்டை நிலைநிறுத்துகிறது. இந்த கொள்கைகள் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவிலான புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. நிலமை இவ்வாறிருக்க நாம் ஏன் மாறவில்லை என்பது எமக்கு தோன்றும் ஒரு கேள்வி? என்று இன் தேசிய அமைப்பாளர் வின்சத யசஸ்மினி குறிப்பிடுகின்றார்.
ஊடகச் செயலாளர் என்ற வகையில், டிலங்க மதுரங்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் பசுமை முயற்சிகள் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் தேவையான சக்தியைக் கொண்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் நிலையான விவசாயத்தில் முதலீடு செய்வதன் மூலம் குறிப்பாக சூரிய ஒளி, காற்று மற்றும் நீர் மின்சாரம் ஆகியவற்றில் நாம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும், அதே நேரத்தில் விளிம்புநிலை சமூகங்கள் சுத்தமான சக்தி மற்றும் சிறந்த வாழ்வாதாரங்களை அணுகவும் இவை உதவுகின்றன. நிலக்கரி மற்றும் டீசலில் இருந்து புதுப்பிக்கத்தக்க சக்தி ஆதாரங்களுக்கு மாறுவது மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சுகாதாரச் செலவுகளையும் குறைக்கிறது. இந்த முயற்சிகள் கிராமப்புறங்களை ஆதரிக்கின்றன, கல்வி மற்றும் தொழில்முனைவு மூலம் உள்ளூர் மக்களை மேம்படுத்துகின்றன. மேலும், காலநிலை மாற்றத்திற்குத் தயாராகி, மீள்கட்டுமான உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதன் மூலம், அனைவருக்கும் பாதுகாப்பான, நிலையான எதிர்காலத்தை இலங்கை உறுதிசெய்ய முடியும்,” என்றார்.
Sri Lanka Blue Green Alliance அர்த்தமுள்ள உரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதாலும், முற்போக்கான கொள்கைகளுக்காக குரல் கொடுப்பதாலும், அதன் ஒன்றிணைந்த குரல் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் எதிரொலிக்கிறது. “பேண்தகைமை என்பது ஒரு அபிலாஷை மட்டுமல்ல, ஒரு உறுதியான யதார்த்தம், வாழ்க்கையை வளமாக்கும் மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு பூமியைப் பாதுகாக்கும் எதிர்காலத்தை நோக்கி இலங்கையை வழிநடத்த ஒரு அமைப்பு என்ற வகையில் நாங்கள் தயாராக இருக்கிறோம், அது இப்போது இல்லையென்றால் ஒருபோதும் இல்லை!” என இந்த இளம் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
டிலங்க மதுரங்க – ஊடகச் செயலாளர் – Sri Lanka Blue Green Alliance