தொடக்க வணிகங்களுக்கு; இணைந்த பணியிடம், அடைகாத்தல் மற்றும் துரித்தப்படுத்தல் வசதிகளை வழங்குகின்ற, விருது பெற்ற நிறுவனமான Hatch, ஒரு ஒத்துழைப்பை பெறும் நோக்கில் தமது உத்தியோகபூர்வ வங்கியாளராக HDFC வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் தொடக்க வர்த்தக சமூகத்திற்கு, இலங்கையின் சவாலான பொருளாதார சூழலை எதிர்கொள்வதில் அவர்களின் வணிகம் தொடர்பில் பிரத்தியேக கடன் வசதியை வழங்குகிறது.

அனைத்து வணிகங்களிலும் 90% கணக்கீடு, 45% வேலைவாய்ப்பை வழங்குதல் மற்றும் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% பங்களிப்பை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகள் (MSMEs) இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றன. உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் வசிப்பதால், MSMEsகள் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுவதற்கான முக்கிய ஆதாரமாக உள்ளன. அவை வறுமையை ஒழிப்பதில் முக்கியமான இடத்தை பிடிக்கின்றன. உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக இலங்கையின் மீளெழுச்சி திட்டத்தில் உள்ளூர் MSME யின் நிலைப்பு மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பது ஒரு மூலோபாய முன்னுரிமையாக அமைய வேண்டும்.

வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன (HDFC) வங்கி இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட ஒரு விசேட வங்கியாகும். HDFC என்பது கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்ட ஒரு அரச-தனியார் பங்குடைமை நிறுவனம் என்பதோடு, பொது திறைசேரியானது, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் இதன் 51% பங்குகளை கொண்டுள்ளது. HDFC வங்கியானது 39 கிளைகள் கொண்ட நாடளாவிய வலையமைப்புடன், நிலைபேறான வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நபர்களுக்கான முதன்மையான நிதிப் பங்காளியாகும். வீடமைப்பு நிதியானது முக்கிய வணிகமாக இருக்கும் அதே வேளையில், HDFC வங்கியானது வீட்டு அடிப்படைகளுக்கு அப்பாற்பட்டது என்பதுடன், வீட்டுத் தேவைகள், கல்வி, அபிவிருத்தி நிதி, நுண் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கான நிதியுதவி, குத்தகை, தங்கக் கடன்கள் மூலம் இலங்கையர்களின் சிறந்த வாழ்க்கைக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்குமான நோக்கத்தை கொண்டுள்ளது.

Hatch ஆனது 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அது தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு அடைகாத்தல் (Incubator) மற்றும் துரிதப்படுத்தல் (Accelerator) திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும் நாடு முழுவதும் உள்ளுர் தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நோக்கில் பல்வேறு வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான பாதையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்முனைவோர் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பவர்கள் என Hatch நம்புகின்றதோடு, ஒத்துழைப்பு புத்தாக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது பின்னணியைப் பொருட்படுத்தாமல், உலகில் அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற Hatch இன் நம்பிக்கையோடு இந்தத் திட்டங்கள் ஒருங்கிணைந்துள்ளன. வெறுமனே 28 வணிக தொடக்கங்களுடன் ஆரம்பித்து, 4 வருடங்களில் 500 இற்கும் மேற்பட்ட வணிக தொடக்கங்களுக்கு Hatch தனது ஆதரவை அளித்துள்ளது. இவற்றில், 37% ஆன தொடக்கங்களை, பல்வேறு திட்டங்களின் ஊடாக Hatch அடைகாத்து துரிதப்படுத்தியுள்ளது. மேலும் இதில் 33% நிறுவுனர்கள் பெண்கள் தலைமையிலான அல்லது பெண்களை மையப்படுத்திய வணிகங்களாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொழில்முனைவோர் எனும் வகையில், வழிகாட்டுதல், வணிக அபிவிருத்தி , முதலீட்டாளர்களுடன் பொருத்தத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில், பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சிகள் மற்றும் 2020ஆம் ஆண்டு ஆரம்பித்த Kickass திட்டம் முதல், பல்வேறு திட்டங்கள் Hatch இற்கு எப்போதும் முக்கிய தூணாக இருந்து வருகிறது. AccelerateHer திட்டம் 2021 செப்டெம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. அது தற்போது Hatch இன் முக்கிய திட்டங்களில் ஒன்றாக விளங்குகின்றது.  AccelerateHer திட்டத்தின் வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக, Hatch குழு மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள் இணைந்து கொழும்பு, காலி, கண்டி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குச் சென்று, வணிகம் மற்றும் தொழில் முனைவு ஆகிய முக்கிய விடயங்களை உள்ளடக்கிய 3 நாள் வணிக துவக்க முகாம்களை நடத்தினார்கள். இலங்கையில் பெண் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட Hatch இன் திட்டங்கள் மூலம் நாடு முழுவதிலுமிருந்து 50 இற்கும் மேற்பட்ட பயனடைந்தோர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் தற்போது Hatch சூழல் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளனர். இதன் மூலம் அவர்கள் இந்த கடன் வசதியைப் பெறுவார்கள்.

Hatch மற்றும் HDFC ஆகிய இரு தரப்பிற்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பானது, தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம், உள்ளூர் இலங்கைப் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், அவர்கள் இரு தரப்பினரும் கொண்டுள்ள பலத்தை தொழில்முனைவோர் பயன்படுத்த வாய்ப்பளிக்கிறது.

படவிளக்கம்

இடமிருந்து வலம்: Hatch, பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் இணை நிறுவுனருமான பிருந்தா செல்வதுரை- ஞானம் மற்றும் HDFC வங்கியின் தலைவர் வசந்தி மஞ்சநாயக்க

Hatch மற்றும் HDFC வங்கி இடையேயான உத்தியோகபூர்வ கூட்டாண்மை தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *