இலங்கையின் சந்தைப்படுத்தலுக்கான தேசிய அமைப்பான, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (Sri Lanka Institute of Marketing – SLIM) 2022 SLIM தேசிய விற்பனை விருதுகளை (முன்னர் SLIM NASCO என அழைக்கப்பட்டது) மீண்டும் நடாத்தவுள்ளது. விற்பனைப் பிரதிநிதிகளால் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வான இது, ‘SLIM தேசிய விற்பனை விருதுகள்’ (SLIM National Sales Awards) என இவ்வருடம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது விற்பனை தொடர்பான அம்சத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மதிப்புமிக்க நிகழ்வானது, தொடர்ச்சியாக கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதோடு, நிறுவனங்களில் அதிக செயற்றிறன் கொண்ட விற்பனையாளர்களுக்கு அவர்களின் சிறந்த முயற்சிகள் மற்றும் விற்பனை தொடர்பான அம்சத்தில் அவர்களது சாதனைகளை கௌரவித்து, அவர்களுக்கு தேசிய அளவில் அங்கீகாரமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் விருதுகள் திட்டத்தை சிறந்த மட்டத்தில் நிலைநிறுத்துவது மற்றும் உலகத் தரத்திற்கு இணையான விற்பனை நிபுணர்களுக்கு அங்கீகாரமளிப்பதே, SLIM தேசிய விற்பனை விருதுகளின் தூர நோக்காகும். அத்துடன், வெற்றியாளர்களில் சிறந்தவர்களை உலக அரங்கில் சிறந்த மட்டத்திற்கு உயர்த்துவதற்கான திட்டங்களையும் SLIM கொண்டுள்ளது.

SLIM தேசிய விற்பனை விருதுகளானது, 20 இற்கும் மேற்பட்ட தொழில்துறைகளில் செயற்படுபவர்களுக்கு அங்கீகாரமளித்து வெகுமதிகளை வழங்குகின்றன. இது தனிநபர்கள் தமது நிறுவனங்களின் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. SLIM NSA 2022 போட்டிக்கான நுழைவு பிரிவுகளில் முன்-வரிசையிலுள்ளோர் (Front-Liners – FL), விற்பனை பிரநிதிகள் மற்றும் விற்பனை மேற்பார்வையாளர்கள் (Sales Executives & Sales Supervisors – SE), பிராந்திய முகாமையாளர்கள் (Territory Managers – TM), பிராந்திய விற்பனை முகாமையாளர்கள் (Regional Sales Managers (RSM) மற்றும் உதவி விற்பனை முகாமையாளர்கள் (Assistant Sales Managers), தேசிய விற்பனை முகாமையாளர்கள் (National Sales Managers – NSM) மற்றும் விற்பனை முகாமையாளர்கள் (Sales Managers – SM) உள்ளிட்ட ஏனைய விற்பனை உதவி ஊழியர்கள் (Sales Support Staff – SM) அடங்குகின்றனர். 2022 SLIM தேசிய விற்பனை விருதுகளானது, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்காக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் முடிவுகளை அறிவிக்கும் ஒரு சிறந்த வருடமாக அமையவுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்குமான மதிப்பாய்வு காலமானது, உரிய நிறுவனத்தின் நிதியாண்டின் அடிப்படையில் 2021 டிசம்பர் 31 அல்லது 2022 மார்ச் 31 இல் நிறைவடையும் வருடமாக கணிப்பிடப்படும்.

இப்புதுப்பிக்கப்பட்ட போட்டி குறித்து கருத்து தெரிவித்த, SLIM அமைப்பின் தலைவர் நுவன் கமகே, “தேசிய விற்பனை விருதுகள் (முன்னர் NASCO என அறியப்பட்டது) எமது வருடாந்த நாட்காட்டியில் எப்போதும் முதல் நிலையில் அமையும் நிகழ்வாக இருந்து வருகிறது. அத்துடன் பல வருடங்களாக கடுமையான போட்டித்தன்மையுடன் இருந்து வரும் ஒரு நிகழ்வுமாகும். அதன் அங்கீகாரமானது, எந்தவொரு நிறுவனத்திலும் முன்னணியில் இருப்பவர்களான விற்பனை வல்லுநர்களை ஊக்குவிக்கிறது. வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு அதனை எதிர்கொண்டு, வெற்றிக் கொடியை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் நபர்களாக திகழும் அவர்களை இவ்வாறான கௌரவிப்பு மேலும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும்.” என்றார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “எதிர்காலத்தில் நாம் ஈடுபட உத்தேசித்துள்ள சர்வதேச இணைப்புடன், புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த SLIM தேசிய விற்பனை விருதுகள், உலக மட்டத்திற்கு உயர்த்தும். ஒரு தேசிய அமைப்பு எனும் வகையில் SLIM ஆகிய நாம், விற்பனை வல்லுநர்கள் தாங்கள் பங்கு வகிக்கும் அந்தந்த வணிகங்களை இவ்வருடம் எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் என்பதை காணவுள்ளதோடு, அவர்களுக்கு உயர் அங்கீகாரத்தை வழங்குவதையும் பார்க்க ஆவலாக காத்திருக்கிறோம்,” என்றார்.

கடந்த பதிப்புகளைப் போலவே, இவ்வருடம் இடம்பெறும் போட்டியிலும் பெண் விற்பனைப் பணியாளர்களை போட்டியில் பங்கேற்குமாறு SLIM ஊக்குவிப்பதோடு, நிறுவனம் மற்றும் தொழில்துறைகளில் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்காக அங்கீகரித்து பாராட்டவும் தயாராகவுள்ளது. பெண் விற்பனைப் பணியாளர்களுக்கான விசேட அங்கீகாரத்தின் தேவையானது, நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பெண்களை தொடர்ந்து மேம்படுத்துவது தொடர்பான SLIM கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு வெளிப்பாடாகும்.

இவ்வருட விருது வழங்கும் விழா, ‘நீங்களே மாற்றத்தை உருவாக்குகிறீர்கள்’ எனும் கருப்பொருளை கொண்டுள்ளது. சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில், பல்வேறு கடினமான சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற விற்பனை வல்லுநர்களை இது கெளரவிக்கவுள்ளது.

திட்ட தலைவர் இனோக் பெரேரா தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட போது, “கொவிட் தொற்று மற்றும் பொருளாதார சவால்கள் காரணமாக நாடு மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில், விற்பனை பணியாளர்கள் அதனை சகித்துக்கொண்டு சிறப்பாக செயற்பட வேண்டியிருந்தது. நிறுவனங்கள் சிறந்த விற்பனையாளர்களை உருவாக்குவதற்காக முதலீடு, பயிற்சி, ஊக்கமளித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். SLIM தேசிய விற்பனை விருதுகள் ஆனது, விற்பனையாளர்களின் முயற்சிகளை அங்கீகரித்து, அவர்களின் நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் அவர்களுக்கு வெகுமதி அளிக்க சிறந்த தளமாகும்.” என்றார்.

SLIM தேசிய விற்பனை விருதுகளுக்கான விண்ணப்பங்களை https://slim.lk/nationalsalesawards ஊடாக பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து விண்ணப்பங்களும் 2022 நவம்பர் 30 பிற்பகல் 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், முறையாகப் பதிவுசெய்து, வணிகங்களை தொடர்ச்சியாக செயற்படுத்துகின்ற பொது மற்றும் தனிப்பட்ட உரிமை கொண்ட நிறுவனங்களும் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்களாவர்.

இப்போட்டி தொடர்பான மேலதிக தகவல்களை, கங்கானி – 0703266988 மற்றும் திமித்ரா – 0703463171 ஆகியோரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *