IT பட்டய நிறுவனமான BCS, தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் 2022 (National ICT Awards – NBQSA 2022) இனது 24ஆவது பதிப்பை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. NBQSA என்பது இலங்கையின் ICT துறையில் மிகவும் மதிப்புவாய்ந்த ஒரு போட்டியாகும். இது, ICT தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்கும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சிறந்த சாதனைகளுக்கு அங்கீகாரத்தை வழங்குவதுடன், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, அவர்களது உள்ளூர் ICT தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு, சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

National ICT Awards – NBQSA 2022 இன் தலைவர் சன்ஹர்ஷ ஜயதிஸ்ஸ இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் ICT துறையில் மிகவும் பெறுமதிமிக்க விருது வழங்கும் விழாவான, தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் – NBQSA 2022 இற்கு தலைமை தாங்குவது தொடர்பில் நான் பெருமிதமடைகிறேன். நான் இப்போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதோடு, இலங்கையின் ICT துறை முன்னெப்போதும் இல்லாத அளவிலான உயரத்தை எட்டுவதையும் காண விரும்புகிறேன்”. என்றார்.

National ICT Awards – NBQSA 2022 யின் தலைமை நடுவரான கீதப்பிரிய திலகரத்ன தனது கருத்துகளைப் பகிரும்போது, “நான் பல ஆண்டுகளாக தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகளில் தலைமை நடுவராக இருந்து வருகிறேன். தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் அது தொடர்பான விருதுகள் எவ்வாறு வளர்ச்சியடைந்து வருகின்றன என்பதை நான் கண்கூடாக பார்த்து வருகிறேன். இவ்விருது வழங்கும் விழாவை மிக கௌரவத்துடன் மிக ஆவலாக எதிர்பார்ப்பதோடு, கடந்த வருடங்களில் இருந்ததை விட அதிகமான பங்கேற்பாளர்களை இம்முறை காணக் கிடைக்குமென நான் எதிர்பாக்கிறேன்”.

இப்போட்டியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் எண்ணிக்கை, வருடாந்தம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றது. National ICT Awards – NBQSA 2022 ஆனது, BCS இலங்கை பிரிவின் முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகும் என்பதுடன், இது இலங்கையில் ICT துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்த உதவும் தனித்துவமான தளத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னர் இடம்பெற்ற National ICT Awards – NBQSA விருதுகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்டவர்கள், ASIA Pacific ICT Awards (ஆசிய பசிபிக் ICT விருதுகளில்) போட்டியிட்டுள்ளதோடு, அதில் அவர்கள் உயர் மட்ட அங்கீகாரத்துடன் நம்பமுடியாத உயரங்களை எட்டியுள்ளனர்.

இலங்கை தகவல் தொழில்நுட்பத்திற்கான பட்டய நிறுவனமான BCS இலங்கை பிரிவின் தலைவர் வஜீந்திர எஸ். கந்தேகமகே இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் முதன்மையான பட்டயத் தகவல் தொழில்நுட்ப நிபுணத்துவ அமைப்பு எனும் வகையில், இலங்கையர்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தர மேம்பாடுகளுக்கு வசதியளிப்பது எமது முயற்சிகளில் ஒன்றாகும். அவர்களால் உருவாக்கப்பட்ட சிறந்த தரமான ICT தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு நாம் அங்கீகாரம் வழங்குவதோடு, உள்ளூர் ICT தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களின் வணிகத்திற்கு பொருத்தமான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, அவர்கள் முதலீடுகளை பெறுவதற்கான சந்தைப்படுத்தல்களையும் எளிதாக்குகிறோம். இப்பாரிய முயற்சியானது, தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் வடிவில் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றது. இதன் வெற்றியாளர்கள் Asia Pacific ICT Alliance (APICTA) விருது நிகழ்வில் நேரடியாக பங்கேற்க தகுதியுடையவர்களாகின்றனர். ICT தொழில்துறையின் வளர்ச்சியால் இலங்கையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என நாம் நம்புவதால், இந்நெருக்கடியான தருணத்தில் நாம் இந்நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளோம்.” என்றார்.

BCS இன் இலங்கை பிரிவானது 1998ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வருகின்றது. அத்துடன், APITCA இற்கான பங்கேற்பாளர்களை பரிந்துரைப்பதோடு, இலங்கையின் ICT தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அளவுகோலாகவும் அது உள்ளது. National ICT Awards – NBQSA 2022 தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: www.nbsqa.org அல்லது https://bcssrilanka.org இணையத்தளங்களை பார்வையிடவும்.

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *