ஊடக வெளியீடு – உடனடி வெளியீட்டிற்காக

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனான Market Development Facility (MDF) ஆனது, இலங்கையின் கோப்பி தொழிற்துறையுடன் இணைந்து, இலங்கையின் கோப்பி துறையைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஒன்றிணைத்து முதன் முதலாக ‘Sri Lanka Coffee Festival’ (இலங்கை கோப்பித் திருவிழா) நிகழ்வை நடாத்தியிருந்தது.

இலங்கையில் தனித்துவமாக வளரும் விசேடத்துவம் கொண்ட கோப்பி மற்றும் மீள வளர்ந்து வரும் கோப்பிக் கலாச்சாரத்தின் கொண்டாட்டத்தை குறிக்கும் இவ்விழாவானது, இத்துறையின் மீதான அஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவை எடுத்துக்காட்டுகிறது. இலங்கை கோப்பியின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவதற்காக, அரசாங்க மற்றும் தனியார் துறையிலுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து, கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், உள்ளூர் கோப்பி துறையில் உள்ள பல்வேறு மட்டத்திலான பங்குதாரர்களை மையப்படுத்தி இந்நிகழ்வு ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான குழு ரீதியான கலந்துரையாடல்கள், சர்வதேச கோப்பி நிபுணர்களின் விளக்க காட்சிகள் மற்றும் உள்ளூர் விசேட கோப்பி வர்தகநாமங்களை காட்சிப்படுத்தும் கோப்பி எக்ஸ்போ ஆகியன இடம்பெற்றன. நிகழ்வின் ஒரு பகுதியாக, இலங்கையின் விசேடத்துவமான கோப்பி பற்றிய MDF-Roar Media ஆவணப்படத்தின் வெளியீடு மற்றும் MDF இன் ‘Arabica Coffee Value Chain Analysis’ (அரேபிய கோப்பி மதிப்புச் சங்கிலி பகுப்பாய்வு) அறிக்கையும் வெளியிடப்பட்டது.

உலகளாவிய விசேடத்துவம் வாய்ந்த கோப்பிச் சந்தையானது கோப்பி உற்பத்தியாளர்களுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது. இச்சந்தையானது, 2018 இல் 35 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 2025 ஆம் ஆண்டளவில் 80 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கேள்விக்கு ஏற்ப, இலங்கையின் கோப்பி ஏற்றுமதியானது அண்மைய வருடங்களில் அதிகரித்து வருகிறது. 2017 – 2019 இற்கு இடையில் 84 வீத அதிகரிப்பை அது காண்பிக்கிறது. கோப்பித் தொழில்துறையில் தனியார் துறையிலிருந்தான முதலீடுகள் அதிகரித்துள்ளதுடன், இலங்கையின் ஹோட்டல்கள், உணவகங்கள், கெபேக்கள் போன்றவற்றில் உள்நாட்டில் வளர்க்கப்படும் கோப்பிக்கான தேவை அதிகரித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசின் தனித்துவமான தனியார் துறை மேம்பாட்டு முயற்சியான MDF மூலம், இலங்கையின் விசேடத்துவம் வாய்ந்த கோப்பித் துறைக்கான அவுஸ்திரேலியாவின் ஆதரவு வழங்கப்படுகிறது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொலி இந்நிகழ்வில் கலந்துகொண்டு தனது கருத்தை தெரிவிக்கையில், ​​“இலங்கைக்கு பெரும் பலம்மிக்க கோப்பித் துறையானது, ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்குவதோடு கிராமிய கோப்பி விவசாயிகள் மற்றும் விவசாய சமூகங்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பளிக்கிறது. இலங்கையின் விசேடத்துவம் வாய்ந்த கோப்பித் துறையை வலுப்படுத்துவதற்கு மிக மும்முரமாக இணைந்து செயற்படுவதில் அவுஸ்திரேலியா பெருமிதம் கொள்கிறது.” என்றார்.

இலங்கையின் விசேடத்துவம் கொண்ட கோப்பியில் சுமார் 80 வீதமானது, பெரும்பாலும் பெண்களைக் கொண்ட சிறு விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது.

இலங்கை கோப்பிச் சங்கத்தின் தலைவர் ரினோஸ் நாசர் கருத்துத் தெரிவிக்கையில், “தனியார் துறையினூடாக உள்ளுர் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ‘சிலோன் கோப்பி’ யை ஊக்குவிப்பது தொடர்பான எமது முயற்சிகளை அதிகரிக்கச் செய்யும் உயர்ந்த அழுத்தத்தை இலங்கை கொண்டுள்ளது. இலங்கைத் தேயிலையைப் போன்றே, கோப்பிக்கும் தனித்துவமாக விளங்க இலங்கைக்கு வாய்ப்பு காணப்படுகின்றது. இலங்கை கோப்பித் தொழிற்துறையை முன்னேற்றமடையச் செய்வது தொடர்பில், அனைத்து பங்குதாரர்களும் தந்திரோபாய ரீதியாக ஒன்றிணைந்து செயற்படுவதே எமது இலக்காகும்” என்றார்.

சிறுகைத்தொழில் மூலமான மற்றும் நிலைபேறான முறையில் உற்பத்தி செய்யப்படும் விசேடத்துவம் கொண்ட கோப்பியை கொள்வனவு செய்வதில், சர்வதேச கோப்பிக் கொள்வனவாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதை உலகளாவிய போக்குகள் காண்பிக்கின்றன.

உலகளாவிய பச்சைக் கோப்பி சமூக நிறுவனமான Raw Material இன் பணிப்பாளர் Matt Graylee இந்நிகழ்வில் தனது கருத்தை தெரிவிக்கையில், “விசேடத்துவமான கோப்பிக்கான வளர்ந்து வரும் சர்வதேச சந்தையானது, இலங்கையின் சிறு உற்பத்தியாளர்களுக்கு ஒரு பாரிய வாய்ப்பை ஏற்படுத்துகிறது. நவீன நுகர்வோர், உயர் தரத்திலான பொருளை விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளனர்  என்பதுடன், தங்கள் வீட்டுத் தோட்டங்களில் கோப்பியை வளர்க்கும் பெரும்பாலான பெண்கள் உள்ளிட்ட உள்ளூர் விவசாயிகள் இதன் மூலம் பயன் பெறுகிறார்களா என்பதை அறிய விரும்புகிறார்கள்.

இவ்விழாவில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொலி, சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை; ஏற்றுமதி விவசாயத் திணைக்களம்; இலங்கை சுங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், தனியார் துறை பங்குதாரர்கள், தோட்டக்காரர்கள், பதப்படுத்துபவர்கள் மற்றும் கொள்வனவாளர்கள், உள்நாட்டு விசேடத்துவம் வாய்ந்த கோப்பியை விற்கும் ஹோட்டல்கள், உணவகங்கள், கெபேக்கள் உள்ளிட்ட கோப்பி மதிப்புச் சங்கிலியில் உள்ள தனியார் பங்காளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *