இலங்கையின் முன்னணி மாபெரும் நிறுவனங்களில் ஒன்றான DIMO, ரூமஸ்ஸலவில் உள்ள உலகப் புகழ்பெற்ற போனவிஸ்டா பவளப்பாறைகளில் காணப்படும் பவளங்களை மீட்டெடுத்து, பாதுகாக்கும் முயற்சியான  “Life to Reef” செயற்திட்டத்தின் நான்காம் கட்டத்தை அண்மையில் நிறைவுசெய்தது. நிலையான அபிவிருத்தி இலக்கு #14 (நீருக்கு அடியிலான வாழ்வு) இன் பிரதான DIMO ஆதரவாளராக இருந்து வருவதுடன், போனாவிஸ்டா பாறைகளிலிருந்து பவளப்பாறைகளை மீட்டெடுத்து பாதுகாக்கும் முயற்சியை வனவிலங்கு மற்றும் பெருங்கடல் வள பாதுகாப்பு (WORC) அமைப்புடன் இணைந்து 2017 முதல் முன்னெடுத்து வருகிறது.

ரூமஸ்ஸலவில் இடம்பெற்ற “Life to Reef” செயற்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் தன்னார்வ நாள் நிகழ்வில் DIMO உறுப்பினர்கள் 28 பேர் கலந்து கொண்டனர். DIMO குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கஹனாத் பண்டிதகே அவர்களின் வழிநடத்தலின் கீழ், DIMO குழுமத்தின் பல்வேறு வணிகப்பிரிவுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சுழியோடிகள், ஸ்நோர்கெலர்ஸ் (snorkelers), நீச்சல் வீரர்கள் என பல்வேறு விதமாக இந்த முயற்சிக்கு தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர். கரையிலிருந்து 150 மீட்டர் தொலைவில் 120 பவள குருத்துகள் வரை நடப்பட்ட  சீமேந்து தகடுகளில் கட்டப்பட்ட பவளங்களுடன், பவளத்தை நடும் மற்றும் பாறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் தன்னார்வலர்கள் மும்முரமாக பங்கேற்றனர். நாற்று மேடை இறாக்கைகளில் கட்டப்பட்ட பவளங்கள் ஆழமான நீருக்குள் சுழியோடிகளால் கொண்டு செல்லப்பட்டு கடலின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டதுடன், முன்னர் நடப்பட்ட பவளங்களின் வளர்ச்சியையும், அவை சுற்றுச்சூழல் அமைப்புக்கு எவ்வாறு தம்மை இசைவாக்கிக்கொண்டன என்பதையும் அவர்கள் ஆராய்ந்தனர். பிளாஸ்டிக் மாசினால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைப்பதற்காக இந்த குழுவானது பாறை மற்றும் கடற்கரையில் ஒரு விரிவான துப்புரவு நிகழ்ச்சித்திட்டத்தையும் முன்னெடுத்தது.

DIMO நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே குறிப்பிடுகையில், “மேலுமொரு வருடத்திற்கு இந்த முக்கியமான திட்டத்தின் ஓர் அங்கமாக நீடிக்க முடிந்துள்ளமை தொடர்பில் DIMO உற்சாகமாக உள்ளது. ஒரு பொறுப்புள்ள நிறுவனம் என்ற வகையில், நாட்டின் உயிரியல் பல்வகைமையை பெருக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாக்கும் ஆற்றலைக் கொண்ட திட்டங்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான வழிகளை நாங்கள் தொடர்ந்து தேடுகிறோம். இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உயிரியல் பல்வகைமை பாதுகாப்பு செயற்திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இது ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டபடி நிலைபேறான அபிவிருத்தி இலக்கு # 14 (நீருக்கு அடியிலான வாழ்வு) உடன் நேராக இணைகின்றது என்பதாகும், இது எங்களுக்கு இதனை இன்னும் முக்கியமானதாக்குகின்றது. இந்த திட்டத்தின் 4 ஆவது கட்டத்தில் மும்முரமாக பங்கேற்ற DIMO உறுப்பினர்களின் ஆர்வத்தைக் கண்டு நானும் வியப்படைகின்றேன்” என்றார்.

இந்த செயற்திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, மொத்தம் 2,500 குருத்துகள் நடப்பட்டுள்ள அதேநேரத்தில், 6 செயற்கை பாறைகள் நாற்று மேடைகள் மற்றும் உருக்கு இறாக்கைகளுடன் கடலுக்கு  அடியில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான பவள பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உறுதியளிக்கிறது. இந்த 4 ஆண்டு காலப்பகுதியில், இந்த திட்டம் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட பவள துண்டுகளை மீட்டெடுத்துள்ளதுடன்,  பவளப்பாறைகளால் மூடப்பட்ட பகுதி 3.5 ஏக்கருக்கும் அதிகமாகும். இன்று வரை, எட்டு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 வகையான பவளப்பாறைகள் மாற்றப்பட்டுள்ளன. பவளப்பாறைகள் தொடர்ச்சியாக மீட்டெடுக்கப்படுவதால், பாறைகளில் உள்ள பவள இனங்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, ​​சில பவள இனங்கள் சுமார் 20 செ.மீ உயரத்திற்கு வளர்ந்துள்ளதுடன், 30 – 35 கிளைகளாக வளர்வதற்காக பிரிக்கப்பட்டுள்ளன.

WORC நடாத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, 2017 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் butterfly fish இனங்களின் எண்ணிக்கை 4 இலிருந்து 13 ஆக உயர்ந்ததுடன், 2021 ஆம் ஆண்டில் 2 ஆமை இனங்கள் இந்தப் பாறைகளில் காணப்பட்டன. 2017 ஆம் ஆண்டில் பவளப்பாறையில் காணப்படாத Pomacanthidae குடும்பத்தைச் சேர்ந்த Angelfish மூன்று இனங்கள் இப்போது இந்தப் பாறைகளில் காணப்படுகின்றன. இது போன்ற நிகழ்வுகளானது மறுசீரமைப்பு பணிகளின் காரணமாக பாறைகள் புத்துயிரளிக்கப்பட்டுள்ளமையை வெளிப்படுத்துகின்றன. பவளப்பாறை மறுசீரமைப்பு பணிகளின் ஆரம்பத்தில், சுமார் 30 பவளப்பாறை மீன்கள் இருந்ததுடன், இன்று அது 160 ஆக வளர்ச்சியடைந்துள்ளதுடன், தொடர்ந்தும் வளர்ந்து வருகிறது.

நேர்மறையான சுற்றுச்சூழல் தாக்கத்திற்கு மேலதிகமாக, இந்த செயற்திட்டமானது இப்பகுதியில் உள்ள சமூகங்களிடமிருந்து வலுவான ஆதரவையும் பெற்றுள்ளது. ஏனெனில், பாறைகள் மீண்டும் உயிரூட்டம் பெறுவதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதுடன், அதன் மூலம் வருமான மார்க்கங்களை உருவாக்கி வாழ்வாதாரங்களை மேம்படுத்தி நேர்மறையான சமூக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமையாகும். சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து இங்குள்ள சமூகங்களால் முன்னெடுக்கப்படும் ஸ்நோர்கெலிங் கிட்களை (Snorkel kit) வாடகைக்கு வழங்குதல், சிறிய உணவுக்கடைகளை நிறுவியுள்ளமை போன்றன அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன. மேலும்,  DIMO தன்னார்வ குழு இப்பகுதியில் உள்ள பாலர் மற்றும் ஆரம்ப பாடசாலை பிள்ளைகளுக்கான புத்தக நன்கொடை மூலம் இந்த சமூகங்களை மென்மேலும் வலுப்படுத்தவும் ஆதரிக்கவும் முன்வந்தது. Life to Reef செயற்திட்டம், பவளப்பாறைகளை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து இப்பகுதியில் உள்ள மக்களுக்கு அறிவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. அருகிலுள்ள சமூகங்களிடம் இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அவர்கள் இப்போது பவளப்பாறை மற்றும் அதன் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக பொறுப்புடன் செயல்படுகிறார்கள்.

பவளப்பாறைகளின் பரப்பெல்லை கடலின் 1% மட்டுமே என்ற போதிலும், இது 25% கடல் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்கின்றது. 1998 வரை, போனவிஸ்டா பவளப்பாறையானது உயர் உயிரியல் பல்வகைமை கொண்ட பவளப்பாறைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டதுடன், முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு முழுமையான கடல்சார் சூழலாக கருதப்பட்டது.  மேலும் 1998 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட எல்-நீனோ காரணமாக போனவிஸ்டாவில் காணப்பட்ட 95% உயிருள்ள பவளப்பாறைகள் அழிவடைந்தன. போனவிஸ்டா பவளப்படிப்பாறைகளின் உயிரியல் பல்வகைமையை அவற்றின் முழுமையான முன்னைய நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன், DIMO 2017 ஆம் ஆண்டில் வனவிலங்கு மற்றும் பெருங்கடல் வள பாதுகாப்பு (WORC) அமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டமொன்றை ஆரம்பித்தது.

பட விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *