தேசத்தின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, பாற்பண்ணைச் சமூகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் மஹா ஓய நிலப்பிரச்சினையில் பாற்பண்ணையாளர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதனோடு தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் ஒரு பேண்தகு மூலோபாயத்தை உருவாக்கவும், இதன் மூலம் குடும்பங்களை போஷிக்கவும், கால்நடைகளைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்தை உருவாக்கவும் அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

Pelwatte Dairy Industries, மகத்தான சமூக மற்றும் பொருளாதார பெறுமதி கொண்ட ஒரு நிறுவனம் என்ற வகையில், பாற்பண்ணையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், இலங்கை பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அதன் உறுதியான ஆதரவை வழங்கி வருகிறது.  வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்,  வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை விதித்துள்ள கட்டுப்பாடுகள் இந்தப் பகுதியில்  இந்தத் துறையை ஸ்தம்பிக்கச் செய்துள்ளதுடன், இது குறித்து பாற்பண்ணையாளர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக, Pelwatte Dairy அரசாங்கம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் ஆதரவை நாடியுள்ளது.

வீட்டுப் பண்ணையாளர்கள் பொதுவாக தங்கள் வீடுகளில் தற்காலிக கொட்டகைகளை அமைத்து ஒரு சில கால்நடைகளை பேணி வருவதுடன்,  தீவனத்தையும் வழங்கி வருகின்றனர். திறந்த வெளி மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளோர் பத்து முதல் நூற்றுக்கணக்கான  கால்நடைகளை வளர்ப்பதுடன், அவற்றின் உற்பத்தி அளவைப் பொறுத்து தரமான நிலம் அல்லது மேய்ச்சலுக்கான தீவனங்கள் தேவைப்படுகின்றன. 

மகாவலி அதிகாரசபையின் கீழ் உள்ள நிலங்களை கால்நடை வளர்ப்பிற்கு பயன்படுத்த பாற்பண்ணையாளர்களுக்கு அரசாங்கம் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருந்தாலும், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையால் பாற்பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுகின்றது. குறிப்பாக கால்நடைகள் வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தினுள் நுழையும் வேளையில் பாற்பண்ணையாளர்களுடன் வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் முரண்பட்டதுடன், ஒழுங்குமுறை சிக்கல்களையும் பாற்பண்ணையாளர்கள் எதிர்கொண்டிருந்தனர். மேலும் வன சீவராசிகள் அதிகாரிகளுடனும் முரண்பட்டதுடன், பல சந்தர்ப்பங்களில் கடுமையான சட்ட அமுலாக்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இது பெரும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரம்பகெனோயா, பொல்லேபெத்த, கந்தேகம மற்றும் மாதுறு ஓய ஆகிய பகுதிகளில் இது பொதுவான பிரச்சினையாக உள்ளது.

இது தொடர்பில் பாற்பண்ணையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “எங்கள் கால்நடைகளில் 2000க்கும் மேற்பட்டவை எமக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட ஆனால் எங்களுக்கு வழங்கப்படாத நிலங்களில் சிக்கித் தவிக்கின்றன. ஒரு மாதத்திற்கும் மேலாக நாங்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் இது ஒரு கடுமையான பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் கருவுறுதல் பிரச்சினைகள், நோய் மற்றும் உற்பத்தித்திறன் இழப்பு ஆகியவற்றைத் தடுக்க கால்நடைகளில் இருந்து பால் கறக்கப்பட வேண்டும். கால்நடை மருத்துவர்கள் எங்கள் கூற்றை ஆதரித்துள்ளதுடன், நாங்கள் எங்கள் கால்நடைகளை அணுக விரும்புகிறோம்,” என்றனர்.

இந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமானது பேரினப் பொருளாதார தொலைநோக்குப் பார்வையின் கீழ் பல துறைகளை உள்ளடக்குவதுடன், இது உள்நாட்டு தொழில்துறைக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு முதலீட்டு திட்டங்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் போட்டித்தன்மை மிக்க சூழலில் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்லும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும், பணக்கொள்கை மற்றும் இறைக்கொள்கை இத்துறையை உறுதிப்படுத்துவதோடு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹா ஓய மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாற்பண்ணையே வருமான மூலமாக இருந்து வருகிறது. இத்துறையின் பெறுமதி சேர்வைகள் மற்றும் துணைச் சேவைகளை கருத்தில் கொள்ளும் போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். பொதுவாக நுகர்வோர் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீதான பாற்பண்ணைத் துறையின்  பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ள போதிலும் பல அரசியல், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார காரணிகள் இந்த கடினமான காலங்களில் பல குடும்பங்களது வளர்ச்சியைத் தடுத்துள்ளன.

இந்த விளைவு தொடர்பில் கருத்து தெரிவித்த Pelwatte Dairy Industries இன் பொது முகாமையாளர் லக்சிறி அமரதுங்க,”Pelwatte Dairy எப்போதும் நாட்டின் நலனை ஆதரித்து வருவதுடன், மிக உயர்ந்த தரமான பாலுற்பத்திகள் மூலம் தேசத்தை போஷிப்பதற்கான அதன் தொலைநோக்குப் பார்வைக்கு உண்மையாக உள்ளது. எங்கள் பாற்பண்ணையாளர்களின் முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளதுடன், நாங்கள் அவர்களுக்கு எமது ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்காக அதிகாரிகளுடன் மூலோபாய பங்குடமையில் இணைய எதிர்ப்பார்க்கின்றோம்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *